×

மழை பெய்து விவசாயம் செழிக்க மேலூரில் குட்டி வெட்டு திருவிழா : 12 ஆண்டுகளுக்கு பின் நடந்தது

மேலூர் : மதுரை மாவட்டம் மேலூரில், 18 பட்டி கிராமங்களை உள்ளடக்கிய நடுவி நாட்டின் காவல் தெய்வம் ஸ்ரீ காஞ்சிவனம் சுவாமி. பழமை வாய்ந்த இக்கோயிலின் குட்டி வெட்டு திருவிழா கடந்த 12 வருடங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் 18 பட்டி கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஏழுகரை, ஐந்து கரை அம்பலக்காரர்கள், கிராம இளங்கச்சிகள் சேர்ந்து இந்த ஆண்டு திருவிழாவை நடத்த முடிவு செய்தனர்.

இதன்படி 12 வருடங்களுக்கு பிறகு திருவிழா நேற்று நடைபெற்றது. மேலூர்  காஞ்சிவனம் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்ட 18 பட்டி அம்பலக்காரர்கள் மற்றும் இளங்கச்சிகள் மேள,தாளம் முழங்க, பலியிடப்படும் ஆட்டுக்குட்டிகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

அதனை தொடர்ந்து மலம்பட்டி, கோட்டை கிணறு பகுதியில் உள்ள பலியிடங்களில், கிராம மக்கள் புடை சூழ, பெண்கள் குலவையிட ஆட்டு குட்டிகள் பலியிடப்பட்டது. பலியிடப்பட்ட ஆடுகளின் ரத்தத்தை மக்கள் நெற்றியில் திலகமிட்டு கொண்டனர். இதனை தொடர்ந்து வரும் புரட்டாசி மாதத்தில் புரவி எடுப்பு விழா நடத்தப்படுகிறது.

இந்த வழிபாட்டின் காரணமாக மக்கள் பிணி நீங்கி, போதிய மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. புரவி எடுப்பு விழாவில் மேலூர் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள்.

The post மழை பெய்து விவசாயம் செழிக்க மேலூரில் குட்டி வெட்டு திருவிழா : 12 ஆண்டுகளுக்கு பின் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Mellur ,Melur ,Melur, Madurai district ,Sri Kanjivanam ,Madhuvi ,Kutti Kettu festival ,
× RELATED மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன்...